செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடு

Published On 2016-04-12 08:35 IST   |   Update On 2016-04-12 08:35:00 IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
வண்டலூர்:

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளை கோடைகால வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நேற்று மாலை முதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பூங்காவில் உள்ள யானைகள் வெப்பத்தை தணித்துக்கொள்வதற்காக சகதிப்புரள் குட்டை, குளியல் குட்டை அமைக்கப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் கண்டுகளிக்க தினந்தோறும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை யானைகளுக்குத் தெளிப்பான் குளியல் செய்யப்படுகிறது.

மேலும் யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதைப் பார்வையாளர்கள் மாலை 4 மணிக்கு கண்டுகளிக்கலாம். யானைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவுகளுடன் கோடைகால உணவாக தர்பூசணி வழங்கப்படுகிறது.

மனித குரங்குகளுக்கு கோடைகால உணவாக தர்பூசணி, இளநீர், வெள்ளரி, லஸ்ஸி ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் தெளிப்பான் குளியலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கவால் குரங்கு, நாட்டுக்குரங்கு, செங்குரங்கு, கருங்குரங்கு, அனுமன் குரங்கு, கப்புச்சின் குரங்கு போன்ற குரங்கினங்களுக்கு தர்பூசணி, வெள்ளரி ஆகியவை வழங்கப்படுகிறது.

சிறுகரடி மற்றும் இமாலய கருங்கரடி ஆகியவற்றுக்கு கோடைகால உணவாக தர்பூசணி வழங்கப்படுகிறது. பறவைகள் இருப்பிடங்களைச் சுற்றிலும் சணல் கோணிகள் கட்டப்பட்டு காலை மாலை இரு வேளைகளிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

காட்டு ஆடு, வெளிமான், வராகமான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான், கடமான், காட்டுக்கழுதை, செந்நாய், சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்குகளின் இருப்பிடங்களில் பிரமிடு வடிவ கொட்டகைகள் அமைக்கப்பட்டு கூரை வேயப்பட்டு உள்ளது. இத்தகைய கொட்டகைகளில் அதிகப்படியான குளிர்ச்சி நிலவுவதால் விலங்குகள் அதன் அடியில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன.

ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நெருப்புக்கோழி ஆகிய விலங்குகள் இருப்பிடங்களில் நீர்த்தெளிப்பான் அமைக்கப்பட்டு உள்ளது. வெப்பத்தை தணித்துக்கொள்ளும் பொருட்டு இதர விலங்குகளின் இருப்பிடங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு குட்டைகளில் எப்பொழுதும் நீர்த்தேக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Similar News