தமிழ்நாடு

கிராம வீடுகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு- காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு 'பிரதமர் விருது'

Published On 2023-04-16 10:00 GMT   |   Update On 2023-04-16 10:00 GMT
  • வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
  • கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்:

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, 100 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 'ஜல் ஜீவன்' திட்டத்தை கொண்டு வந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் 'பிரதமர் விருது' காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத் தில், 'ஜல் ஜீவன்' திட்டம் தொடங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 அக்டோபரில் இத்திட்டப்பணிகள் முடிவுற்றன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். 'பைப் லைன்' பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News