சிப்காட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை வழியாக குளத்துக்கு செல்லும் காட்சி.
14 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள ஓடைக்காட்டூர் குளம் ரசாயன கழிவுகளால் நிரம்பி உள்ளது.
சிப்காட் தொழிற்சாலையில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்படும் ஆலை கழிவுகளால் 10 கி.மீ. சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிப்பு
- ஆசிய அளவில் மிகப்பெரிய தொழிற் மையமாக திகழும் இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
- மறுசுழற்சி முறையில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 2700 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இந்த தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. சிப்காட் தொடங்கினால் இந்த பகுதி மக்களுக்கு தொழில் வளம் பெருகும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என கருதி கிராம மக்களும், விவசாயிகளும் தங்கள் நிலத்தை வழங்கினர்.
ஆசிய அளவில் மிகப்பெரிய தொழிற் மையமாக திகழும் இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சாய, தோல் ஆலைகள் மட்டுமின்றி அபாயகரமான ரசாயனங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
அதன்படி ஆலைகளும் உற்பத்தியை தொடங்கி தொழில்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சிப்காட்டில் இயங்கும் சில நிறுவனங்கள் சட்ட விரோதமாக ஆலை கழிவுகளை வெளியேற்றி வருகின்றன. இதன் காரணமாக சிப்காட் வளாகத்தில் இருந்து ஓடையில் பெருக்கெடுத்து வரும் கழிவு நீர் 14 ஏக்கர் பரப்பிலான ஓடைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள குளத்தில் நிரம்பி உள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அடுத்தடுத்து 8 குளங்களுக்கு செல்கிறது.
இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஈங்கூர், வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பாளையம், பாழத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து உள்ளது. இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் நிரம்பி இருந்தாலும் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
சோளம், கம்பு, ராகி, காய்கறிகள் விளைந்த பூமியில் கால்நடைகளை கூட மேய்க்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
அபாயகரமான ரசாயன கழிவுகளால் தோல் நோய்களும், சுவாச கோளாறுகளும், ஏற்படுவதுடன் புற்று நோய் பாதிப்புகளும் இப்பகுதியில் அதிகரித்து உள்ளது. இதனால் பலர் கிராமங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து சமீபத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம், சாணார்பாளையம், கொங்கம்பாளையம், உத்தண்டி நாயக்கன் புதூர் மற்றும் வாய்ப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட எலையம்பாளையம், முருகம்பாளையம், சுள்ளிமேடு, தோட்டத்து புதூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன.
சமீபத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட இடங்களில் உள்ள நீரில் கரைந்து உள்ள அனைத்து கனிம மற்றும் கரிம பொருள்களின் அளவீடு அதிக அளவில் உள்ளதால் குடிப்பதற்கு ஏற்றது அல்ல என்ற காரணத்தால் சம்பந்தப்பட்ட இடங்களில் சிவப்பு குறியீடு இட்டு குடிநீருக்கு ஏற்றது அல்ல என அறிவிப்பு பலகை வைத்து மின் மோட்டார்களை இயக்க கூடாது. அதற்கு மாற்றாக அருகில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் எடுத்து மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளனர்.
தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றக் கூடாது. மறுசுழற்சி முறையில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. மேலும் சாய, தோல் ஆலை கழிவுகளை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. ஆனால் இவற்றையும் மீறி ரசாயன ஆலை கழிவு நீர் ஓடைகளில் வெளியேற்றப்படுகிறது.
எனவே நிலம், நீர் காற்று மாசுபாட்டால் வாழ்வாதாரத்தை இழந்து வாழ தகுதியற்ற பகுதியாக மாறி போன இந்த கிராமங்களை மாசற்ற பகுதியாக மாற்ற தேவையான சாத்திய கூறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.