உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் பிரணவ் பட்டம் வென்று அசத்தல்
- 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்திய வீரரான பிரணவ் வெங்கடேஷ் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்தார்.
- 11-வது சுற்றுகள் முடிவில் பிரணவ் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மான்டிநிக்ரோவில் உள்ள பெட்ரோவாச்சில் நடந்தது. இதில் ஓபன் பிரிவில் 63 நாடுகளைச் சேர்ந்த 12 கிராண்ட்மாஸ்டர்கள் உள்பட 157 வீரர்கள் பங்கேற்றனர்.
11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்திய வீரரான பிரணவ் வெங்கடேஷ் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்தார். நேற்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்றில் பிரணவ் , சுலோவேனியா வீரர் மேடிச் லாவ்ரென்சிச்சுடன் 'டிரா' செய்தார். 11-வது சுற்றுகள் முடிவில் பிரணவ் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட பிரணவ் 7-ல் வெற்றியும், 4-ல் டிராவும் கண்டிருந்தார். 18 வயதான பிரணவ் சென்னையைச் சேர்ந்தவர். மேலஅயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுலோவேனியாவில் நடந்த உலக இளையோர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் இரட்டை தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
சமீபத்தில் சீனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் குகேஷ் பட்டம் வென்ற நிலையில் இப்போது தமிழகத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம் கிட்டியுள்ளது.