மீண்டும் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்!
- அஞ்சா இதயத்துடன், ஒருபோதும் தலை குனியா மன உறுதியுடன் திரும்புகிறேன்
- ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே இந்திய பெண்
பாரிஸ் ஒலிம்பிக் 2024 இறுதிப் போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடைப் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த திடீர் ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஹரியானாவின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார் வினேஷ் போகத். அதில் வெற்றியும் பெற்றார். இந்நிலையில் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக "லாஸ் ஏஞ்சல்ஸ் 2028-ஐ நோக்கி அஞ்சா இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் திரும்புகிறேன்" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், முன்னாள் ஆசிய சாம்பியன் ஆவார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். மூன்று முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் ஆவார்.