விளையாட்டு

8 அணிகள் பங்கேற்பு: தமிழ்நாடு சைக்கிளிங் லீக் 27-ந்தேதி தொடக்கம்

Published On 2022-08-13 12:00 GMT   |   Update On 2022-08-13 12:01 GMT
  • பந்தய தூரம் 48 கிலோ மீட்டர் ஆகும்.
  • இந்த தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வெற்றி புள்ளிகள் வழங்கப்படும்.

சென்னை:

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்கிளிங் 'லீக்' பந்தயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணாநகர் சைக்கிள்ஸ் கிளப் சார்பில் தமிழ்நாடு சைக்கிளிங் 'லீக்' (டி.சி.எல்) பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னையை அடுத்த இருங்காட்டுர் கோட்டையில் உள்ள ஓடு தளத்தில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் இந்த சைக்கிளிங் 'லீக்' போட்டியில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்த போட்டியில் நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோ ரேசர்ஸ், ராணிப்பேட்டை ரேன் சையர்ஸ், திருச்சி ராக்போர்ட் ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், குமரி ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் இருப்பார்கள். பந்தய தூரம் 48 கிலோ மீட்டர் ஆகும். இந்த தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வெற்றி புள்ளிகள் வழங்கப்படும். 150 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கிறார்கள்.

ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், 18 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர் என 5 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.

2-வது மற்றும் கடைசி சுற்று கோவையில் நடத்தப்பட இருக்கிறது. முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 லட்சம் வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.2 லட்சமும், 3-வது இடத்துக்கு ரூ.1 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

Similar News