விளையாட்டு

நட்சத்திரங்கள் பங்கேற்கும் கோல்ஃப் போட்டி: சுனில் கவாஸ்கர் அறிவிப்பு

Published On 2026-03-03 16:00 IST   |   Update On 2026-03-03 16:00:00 IST
  • கிரிக்கெட் வீரர்களில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இயான் மோர்கன், மைக்கேல் வாகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
  • இந்த கோல்ஃப் தொடரில் 100-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர், தனது 'சாம்ப்ஸ் ஃபவுண்டேஷன்' (CHAMPS Foundation) அமைப்பின் விழிப்புணர்வுக்காக மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிறப்பு கோல்ஃப் போட்டியை அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், நிதி நெருக்கடியில் இருக்கும் முன்னாள் சர்வதேச வீரர்களுக்கு உதவும் நோக்கில் 'டிபி வேர்ல்ட் செலிபிரிட்டி கோல்ஃப்' என்ற அறக்கட்டளை போட்டியை அறிவித்துள்ளார். இந்த போட்டி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6, 2026) அன்று மும்பை செம்பூரிலுள்ள புகழ்பெற்ற பாம்பே பிரசிடென்சி கோல்ஃப் கிளப்பில் நடைபெறவுள்ளது

1999-ஆம் ஆண்டு கவாஸ்கரால் தொடங்கப்பட்ட CHAMPS Foundation இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது மருத்துவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சிரமப்படும் முன்னாள் சர்வதேச வீரர்களுக்கு கௌரவமான வாழ்வை உறுதி செய்ய உதவுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த கோல்ஃப் தொடரில் 100-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

கிரிக்கெட் வீரர்களில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜி.ஆர். விஸ்வநாத், வெங்கடேஷ் பிரசாத், அஜய் ஜடேஜா, பார்த்திவ் படேல், முரளி கார்த்திக், எஸ். பத்ரிநாத், முரளி விஜய், இயான் மோர்கன், மைக்கேல் வாகன் மற்றும் டேவிட் லாயிட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

டென்னிஸ் வீரர்களில் லியாண்டர் பயஸ், பேட்மிண்டன் வீரர்கள் பிரகாஷ் படுகோன் மற்றும் முன்னணி கோல்ஃப் வீரர்கள் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதிப் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த விழிப்புணர்வு நிகழ்வு விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News