விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் 2-வது சுற்றில் வெற்றி- இகா ஸ்வியாடெக்கும் முன்னேற்றம்

Published On 2022-09-02 09:13 GMT   |   Update On 2022-09-02 09:13 GMT
  • முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் நடால் இழந்தார்.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் ஸ்டெப்ஹென்சை எதிர்கொண்டார்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னியை எதிர் கொண்டார்.

இதன் முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் இழந்தார். அதன் பின்னர் அவர் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 2-6, 6-4, 6-2, 6-1.

மற்ற ஆட்டங்களில் 3-வது வரிசையில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 11-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி), ஆகியோர் வெற்றி பெற்றனர்.

17-வது வரிசையில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னா கோரிக் (குரோஷியா) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெப்ஹென்சை எதிர் கொண்டார். இதில் இகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-4 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலியா சாண்ட்ராவை ( பெலாரஸ்) வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் 6-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 9-வது வரிசையில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்), 19-ம் நிலை வீராங்கனையான டேனிலி கோலின்ஸ் ( அமெரிக்கா ) , 21-வது வரிசையில் உள்ள பெட்ரோ கிவிட்டோவா ( செக் குடியரசு ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

4-வது வரிசையில் உள்ள பவுலா படோசா (ஸ்பெயின்) 7-6, (7-5), 1-6, 2-6 என்ற கணக்கில் பெட்ரோ மேட்ரிக்கிடம் (குரோஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

Tags:    

Similar News