விளையாட்டு
null

தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்த மெஸ்ஸி

Published On 2025-12-13 11:00 IST   |   Update On 2025-12-13 11:47:00 IST
  • கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார்.
  • இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த அவரை ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் லேக்டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

இதனையடுத்து மெஸ்ஸியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

மெஸ்ஸியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர். தான் நடத்திய டீ கடையை அர்ஜென்டினா ரசிகர் கிளப் என்ற பெயரில் மாற்றினார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மெஸ்ஸியை காண ஆர்வமாக உள்ளார். ஏற்கனவே ரூ.7 ஆயிரத்துக்கு இரு டிக்கெட் வாங்கியுள்ள நிலையில் இப்போது மெஸ்ஸியை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.

கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு மெஸ்ஸி பிற்பகல் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு இரவில் காட்சி கால்பந்து போட்டியில் ஆடுகிறார். நாளை மும்பைக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 15-ந்தேதி டெல்லிக்கு புறப்படும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார். 3 நாள் இந்திய பயணத்தில் அவர் மொத்தம் 72 மணி நேரம் செலவிடுகிறார்.

Tags:    

Similar News