விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்தில் இந்தியா- சிலியுடன் இன்று மோதல்

Published On 2025-11-28 10:31 IST   |   Update On 2025-11-28 10:31:00 IST
  • 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001,2016 ) ‘பி’ பிரிவில் உள்ளது.
  • சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.

சென்னை:

14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை 13 நாட்கள் ஹாக்கி போட்டி கள் கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் முறையாக 24 அணிகள் கலந்து கொண்டன. இதுவரை 16 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

2 முறை சாம்பியனான இந்திய அணி (2001,2016 ) 'பி' பிரிவில் உள்ளது. சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.

7 முறை மற்றும் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, கனடா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து (குரூப் ஏ) 2 தடவை கோப்பையை வென்ற அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா (சி), ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா (டி) நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா (இ), 1997-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா, வங்காளதேசம் (எப்) ஆகிய நாடுகள் மற்ற பிரிவுகளில் இடம் பெற்று உள்ளன.

தொடக்க நாளான இன்று 8 ஆட்டங்கள் நடக்கிறது. மதுரையில் இன்று காலை நடந்த தொடக்க ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ஜெர்மனி-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் 19-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்தது. இந்த கோலை ஜஸ்டஸ் வார்வெக் அடித்தார். பதில் கோல் அடிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடினார்கள்.

ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் போட்டியில் சிலியை எதிர்கொள்கிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டம் சென்னையில் இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

கோல்கீப்பர்கள்: பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங்.

பின்களம்: ரோகித் (கேப்டன்) அமீர் அலி, அன்மோல் எக்கா, தலிம் பிரியோபார்தா, சுனில் பாலக்ஷப்பா பென்னுர், ஷர்தானந்த் திவாரி.

நடுகளம்: அங்கித் பால், அத்ரோகித் எக்கா, தோனவ் ஜாம் இங்கலெம்பா லுவாங், மன்மீத் சிங், ரோசன் குஜூர், குர்ஜோத் சிங்.

முன்களம்: சவுரவ் ஆனந்த் குஷ்வாஹா, அர்ஷ்தீப் சிங், அஜீத் யாதவ், தில்ராஜ் சிங்.

உலக தரவரிசையில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. தென்அமெரிக்க நாடான சிலி 18-வது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News