ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தி 9-வது இடம் பிடித்த இங்கிலாந்து
- இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- அயர்லாந்துக்கு 10-வது இடம் கிடைத்தது.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின.
இதில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டிராசை கதன் இந்த 2 கோலையும் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 9-வது இடத்தை பிடித்தது. அயர்லாந்துக்கு 10-வது இடம் கிடைத்தது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, ஜப்பான், சிலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 11 முதல் 16-வது இடங்களை பிடித்தன.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பையை வெல்லப் போவது ஜெர்மனியா? ஸ்பெயினா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி 8-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி எதையும் சந்திக்காமல் அந்த அணி 10-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது.
ஸ்பெயின் அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. முதல் கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு 3-வது இடமான வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் 2 முறை சாம்பியன்களான இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
ரோகித் தலைமையிலான இந்திய அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.