விளையாட்டு

ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்சுடன், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.

வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: ஐதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை

Published On 2024-04-28 04:41 GMT   |   Update On 2024-04-28 04:41 GMT
  • நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி கண்டு 8 புள்ளி பெற்றுள்ளது.
  • சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி ஒருபோதும் தோற்றதில்லை.

சென்னை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு அரங்கேறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி கண்டு 8 புள்ளி பெற்றுள்ளது. சென்னை அணி கடைசியாக லக்னோ மற்றும் சொந்த மண்ணில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் முறையே 8 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசத்தில் அடுத்தடுத்து தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்தில் சொந்த மண்ணில் 210 ரன்கள் குவித்தும் எதிரணியை அதற்குள் கட்டுப்படுத்த தவறியது. பனியின் தாக்கம் காரணமாக சுழற்பந்து வீச்சு கைகொடுக்காததால் உள்ளூரில் சென்னை அணி 3 வெற்றிக்கு பிறகு முதல் சறுக்கலை சந்தித்தது. இந்த சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த வேண்டிய நெருக்கடியில் சென்னை அணி உள்ளது.

சென்னை அணியின் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம் உள்பட 359 ரன்), ஷிவம் துபே (3 அரைசதம் உள்பட 311) ஆகியோர் அருமையாக செயல்பட்டு வருகிறார்கள். ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கணிசமாக பங்களிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீபக் சாஹர் வலுசேர்க்கிறார்கள்.

அதிரடியில் அசத்தி வரும் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், ரன் குவிப்பில் புதிய சாதனை படைத்த அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்த நிலையில் முந்தைய ஆட்டத்தில் 35 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் 207 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 171 ரன்னில் முடங்கியது. இலக்கை விரட்டுகையில் ஆக்ரோஷமான ஆட்டத்தால் தொடக்க மற்றும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. இருப்பினும் தங்களது தடாலடி பேட்டிங் தொடரும் என்றும் இனி வரும் ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புவதாகவும் அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (325 ரன்), அபிஷேக் ஷர்மா (288), ஹென்ரிச் கிளாசென் (275), ஷபாஸ் அகமது அசத்துகிறார்கள். மார்க்ரம்மிடம் இருந்து இன்னும் அதிரடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் நடராஜன், கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

தங்களது சொந்த ஊரில் நடந்த சென்னைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. எனவே அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி ஒருபோதும் தோற்றதில்லை. சொந்த மண்ணில் அந்த அணிக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அந்த பெருமையை தக்கவைத்து கொள்ளவும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் சென்னை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 14 ஆட்டங்களில் சென்னையும், 6 ஆட்டங்களில் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, டோனி, தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே அல்லது ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட் அல்லது நடராஜன்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் - குஜராத் கேப்டன் சுப்மன் கில்.

 

முன்னதாக, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் நல்ல பார்மில் உள்ளனர். ராகுல் திவேதியா, டேவிட் மில்லர், விருத்திமான் சஹா நிலைத்து நின்று அசத்தினால் அந்த அணியின் பேட்டிங் மேலும் பலம் பெறும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சாய் கிஷோர், நூர் அகமது எதிரணியினருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். அதிக ரன்களை வாரி வழங்கும் வேகப்பந்து வீச்சார்கள் மொகித் ஷர்மா, சந்தீப் வாரியர் ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.

பெங்களூரு அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொடரும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அத்துடன் வாய்ப்பு முடிந்து போய்விடும். எனவே முந்தைய ஆட்டத்தை போல் அந்த அணி வீரர்கள் அச்சமின்றி அதிரடியாக ஆடுவதில் கவனம் செலுத்துவார்கள். கடந்த ஆட்டத்தில் 35 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது நிச்சயம் அந்த அணிக்கு நம்பிக்கையை அதிகரித்து இருக்கும்.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (430 ரன்), கேப்டன் டுபிளிஸ்சிஸ், தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், கேமரூன் கிரீன் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா உள்ளிட்ட பவுலர்கள் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 2 முறையும், பெங்களூரு அணி ஒரு தடவையும் வெற்றி கண்டுள்ளன.

Tags:    

Similar News