2-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது தெ. ஆப்பிரிக்கா
- 37.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
மெக்காய்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரீட்ஸ்கே 88 ரன்களும், ஸ்டப்ஸ் 74 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும், மார்ஷ் 18 ரன்களிலும், லபுஸ்சேன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கிரீன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து அலெக்ஸ் கேரி 13 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 10 ரன்களிலும் நடையை கட்டினர். இதனையடுத்து அணியின் வெற்றிக்கு போராடிய ஜோஷ் இங்கிலிஸ் 87 ரன்களில் அவுட்டானார்.
இதனால் 37.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 24-ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.