வீடியோ: வங்கதேச மகளிர் அணிக்கு அதிர்ச்சி அளித்த U-15 சிறுவர்கள் அணி.. உலகக்கோப்பைக்கு முன் பரிதாபம்
- வங்கதேச மகளிர் அணி 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடின.
- வங்கதேச மகளிர் அணி சிவப்பு மற்றும் பச்சை அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடினர்.
2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதமாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் சேலஞ்ச் கோப்பை என்ற தொடரை நடத்தி வருகிறது. இதில் வங்கதேச மகளிர் அணி சிவப்பு மற்றும் பச்சை அணிகளாக பிரிக்கப்பட்டு, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடின.
இந்த தொடரின் ஒரு போட்டியில், வங்கதேச 15 வயதுக்குட்பட்ட சிறுவர் அணி, மகளிர் சிவப்பு அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சிறுவர்கள் அணி 50 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மகளிர் அணி வெறும் 94 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் சிறுவர் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், மகளிர் பச்சை அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறுவர் அணி மீண்டும் அதிர்ச்சி அளித்தது.
யாருமே எதிர்பாராத விதமாக, மகளிர் அணிகள் இரண்டுமே 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அணியிடம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன. இது வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக வங்கதேச மகளிர் அணி எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.