கிரிக்கெட் (Cricket)

20 பந்துகள் வீசுவதற்காக 34 ஆயிரம் கி.மீ. பறந்து செல்லும் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா..!

Published On 2025-08-29 17:36 IST   |   Update On 2025-08-29 17:36:00 IST
  • The Hundred கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி வருகிற 31ஆம் தேதி நடக்கிறது.
  • இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிக்காக ஆடம் ஜம்பா விளையாட இருக்கிறார்.

இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் ஓவல் இன்பின்சிபிள்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டி நாளைமறுதினம் நடக்கிறது. எலிமினேட்டர் சுற்றில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ்- டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிகள் பட்டியில் 2ஆவது மற்றும் 3 ஆவது இடம் பிடித்த அணிகள் இதில் மோதுகின்றன.

இறுதிப் போட்டியில் மோதும் இன்பின்சிபிள்ஸ் (Oval Invincibles) அணியில் ஆடம் ஜம்பா இடம் பிடித்துள்ளார். இவர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடுவதற்காக சென்று விட்டார். தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார்.

அணி நிர்வாகம் இறுதிப் போட்டியில் விளையாட இவரை அழைத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு பறக்க உள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் சுமார் 34 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது. விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் 30 மணி நேரம் ஆகுமாம். இதனால் 20 பந்துகள் வீச ஆடம் ஜம்பா 34 ஆயிரம் கி.மீ. பறந்து செல்ல உள்ளார். இந்தத் தொடரில் ஒரு பந்து வீச்சாளர் 20 பந்துகள் மட்டுமே வீச முடியும்.

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. ஒருவேளை முதல் போட்டியில் ஜம்பா விளையாடுவதாக இருந்தால், லண்டனில் இருந்து உடனடியாக நியூசிலாந்துக்கு செல்ல வேண்டியதாக இருக்கும்.

Tags:    

Similar News