இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அங்கித் ராஜ்பூட்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2013-ல் இடம் பிடித்திருந்தார்.
- முதல்தர போட்டிகளில் 248 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
உத்தர பிரதேச அணிக்காக ரஞ்சி அணியில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளரான அங்கித் ராஜ்பூட் 31 வயதிலேயே இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், உலக கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை தேடுவதாக தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச அணிக்காக 2012-13-ல் அறிமுகமான ராஜ்பூட், ரஞ்சி டிராபியில் 248 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இருந்த போதிலும் இந்திய அணிக்காக அவர் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.
ஐ.பி.எல். தொடரில் 2013-ல் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அந்த அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
சமீபத்தில் முடிவடைந்த ரஞ்சி டிராபியில் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினார். ஆனால் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.