செய்திகள்
சாய் கிஷோர்

ஆடுகளத்துக்கு ஏற்ற வகையில் எனது பந்துவீச்சு இருந்தது - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய்கிஷோர் மகிழ்ச்சி

Published On 2021-08-02 12:19 IST   |   Update On 2021-08-02 16:14:00 IST
எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 24 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.

முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 31 பந்தில் 45 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெகதீசன் 27 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி ) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் அதிகபட்சமாக 39 ரன் எடுத்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு சாய்கிஷோரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி பவுலராக சென்று நாடு திரும்பிய அவர் தனது முதல் ஆட்டத்தில் 30 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். இது தொடர்பாக சாய் கிஷோர் கூறியதாவது:-

எனது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் இதை விட சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று தோன்றுகிறது. எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும். இந்த ஆடுகளம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி 5 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 6 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி 4-வதுவெற்றியை (8 புள்ளிகள்) பெற்றது.

15-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் -மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

திருப்பூர் 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது.

முன்னாள் சாம்பியனான மதுரை ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. 2-வது வெற்றிக்காக அந்த அணிகாத்திருக்கிறது.

Similar News