செய்திகள்
எம்எஸ் டோனி

முக்கியமான கட்டத்தில் கேட்ச்களை தவற விட்டோம் - தோல்வி குறித்து டோனி கருத்து

Published On 2021-05-02 07:47 GMT   |   Update On 2021-05-02 07:47 GMT
பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடும் வகையில் பிட்ச் இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் மும்பையிடம் சென்னை அணி தோல்வியை தழுவியது.

டெல்லியில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது.

அம்பதி ராயுடு ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 27 பந்தில் 72 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். மொய்ன் அலி 36 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), டுபிளசிஸ் 28 பந்தில் 50 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

பொல்லார்ட் 2 விக்கெட் டும், டிரென்ட் போல்ட், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆட் டத்தின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொல்லார்ட் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு காரணமாக இருந்தார். அவர் 34 பந்தில் 87 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். ரோகித் சர்மா 28 பந்தில் 38 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), குயின்டன் டி காக் 24 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சாம் கரண் 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர், ஜடேஜா, மொய்ன் அலி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது தோல்வியை தழுவியது. ஆனாலும் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த தோல்வி குறித்து சி.எஸ்.கே.கேப்டன் டோனி கூறியதாவது:-

இந்த ஆடுகளம் மிகவும் அற்புதமானதாக இருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் செயல்படுத்துவதில்தான் இருந்தது. பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடும் வகையில் பிட்ச் இருந்தது.

அவர்களுக்கு கேட்ச்சுகள் உதவுகின்றன. ஆனால் முக்கியமான கட்டத்தில் நாங்கள் கேட்சுகளை தவற விட்டோம். திட்டத்தை செயல்படுத்துவது முக்கியமானது. அதில் நாங்கள் தவறி விட்டோம்.

புள்ளிகள் பட்டியலில் நாங்கள் முதலிடத்தில் இருந்ததால் இந்த தோல்வி அதிகம் பாதிக்காது. திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். இந்த தோல்வியால் நாங்கள் துவண்டு விடவில்லை. ஆனால் சில வி‌ஷயங்களில் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்.

இவ்வாறு டோனி கூறினார்.

சென்னை அணி 8-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 5-ந்தேதி டெல்லியில் சந்திக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4-ந்தேதி எதிர்கொள்கிறது. 

Tags:    

Similar News