செய்திகள்
அரை சதமடித்த பகர் சமான்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 யில் பாகிஸ்தான் வெற்றி: 3-1 என தொடரையும் கைப்பற்றியது

Published On 2021-04-16 19:14 GMT   |   Update On 2021-04-16 19:14 GMT
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாடியது.
செஞ்சூரியன்:

தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

4 போட்டிகளை கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும், 3-வது போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. 

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் களமிறங்கினர். மார்க்ரம் 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய வான் டர் டுசன் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்தது. மாலன் 33 ரன்னில் வெளியேறினார்.



அடுத்து ஆடிய கேப்டன் கிளாசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். சற்று அதிரடி காட்டிய வான் டர் டுசன் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். அதற்கு பிறகு வந்த வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். 

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 19.3 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி, பஹீம் அஷ்ரப் தலா 3 விக்கெட்டும், ஹரிஸ் ராப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் 
ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுடன் பகர் சமான் ஜோடி சேர்ந்தார்.

பகர் சமான் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் 34 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாபர் அசாம் 24 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஹபீஸ் 10 ரன்னும், ஹைதர் அலி 3 ரன்னும், ஆசிப் அலி 5 ரன்னும், பஹீம், அஷ்ரப் 7 ரன்னும் எடுத்து விரைவில் வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் மொகமது நவாஸ் 25 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி அசத்தியது.

ஆட்ட நாயகனாக பஹீம் அஷ்ரபும், தொடர் நாயகனாக பாபர் அசாமும் தேர்வு செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News