செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Published On 2021-03-06 19:23 GMT   |   Update On 2021-03-06 19:23 GMT
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்த்து விளையாட உள்ளது.
புதுடெல்லி:

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா அசத்தியது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தரின் அபார ஆட்டத்தால் 365 ரன்கள் எடுத்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவது உறுதியாகி உள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 28 டெஸ்ட் தொடர்களில் ஒன்றை மட்டுமே இந்திய அணி இழந்துள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றியைக் கண்ட அற்புதமான அரங்கத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இறுதிப் போட்டியில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது, தொடக்க ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர்களாக ஆனது மற்றும் ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்ததற்காக இந்திய அணி வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News