செய்திகள்
இந்திய வீரர் சுமித் நாகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இந்திய வீரர் சுமித் நாகல் அபார வெற்றி - செரீனா சாதனை

Published On 2020-09-02 20:48 GMT   |   Update On 2020-09-02 20:48 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார்.
நியூயார்க்:

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல், அமெரிக்காவின் பிராட்லி கிளானை எதிர்கொண்டார். 2 மணி 12 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் சுமித் நாகல் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் பிராட்லியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். பிராட்லி 10 ஏஸ் சர்வீஸ் வீசிய போதிலும், பந்தை அதிகமுறை வெளியே அடித்துவிட்டு (40 முறை) தவறிழைத்து சரிந்து போனார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி ஒன்றில் ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவர் வெற்றி காண்பது கடந்த 7 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாமில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். முதல் சுற்று வெற்றியின் மூலம் டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகலுக்கு ரூ.45 லட்சம் பரிசு உறுதியாகி இருக்கிறது.

உலக தரவரிசையில் 124-வது இடம் வகிக்கும் சுமித் நாகல் அடுத்து 3-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) இன்று சந்திக்கிறார். பலம் வாய்ந்த டொமினிக் திம்மை அவர் சமாளிப்பது கடினமே. 23 வயதான சுமித் நாகல் கூறுகையில், ‘கிராண்ட்ஸ்லாமில் எனது முதல் வெற்றியை பெற்றிருக்கிறேன். இது எனக்கு சிறப்பு வாய்ந்த, மகிழ்ச்சியான தருணமாகும். இந்த ஆட்டத்தை ஒரு போதும் மறக்க மாட்டேன். சிறப்பாக செயல்பட வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.’ என்றார்.

முன்னாள் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவுடன் மோதினார். முதல் இரு செட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளான ஆன்டி முர்ரே அதன் பிறகு எதிராளியின் ஒரு மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்தும் தன்னை காப்பாற்றிக்கொண்டு ஒரு வழியாக எஞ்சிய 3 செட்டுகளை போராடி தன்வசப்படுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டார். 4 மணி 39 நிமிடங்கள் மல்லுகட்டிய முர்ரே 4-6, 4-6, 7-6 (7-5), 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்தார்.

டேனில் மெட்விடேவ் (ரஷியா), டிமிட்ரோவ் (பல்கேரியா), பெரேட்டினி (இத்தாலி), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), மரின் சிலிச் (குரோஷியா) ஆகிய நட்சத்திர வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.



பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலாவது சுற்றில் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை விரட்டினார். அமெரிக்க ஓபன் வரலாற்றில் ஒற்றையரில் செரீனா பதிவு செய்த 102-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் அதிக வெற்றி பெற்றவரான கிறிஸ் எவர்ட்டின் (அமெரிக்கா) சாதனையை முறியடித்தார். இதே போல் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), சோபியா கெனின் (அமெரிக்கா), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்) உள்ளிட்டோரும் 2-வது சுற்றை எட்டினர்.

அதே சமயம் செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், 3 முறை சாம்பியனான பெல்ஜியத்தின் கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.
Tags:    

Similar News