செய்திகள்
ஜேசன் ஹோல்டர்

மேட்ச் பிக்சிங், ஊக்கமருந்து குற்றத்தைப்போல் இனவெறியுடன் பேசும் வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஹோல்டர்

Published On 2020-06-30 09:43 GMT   |   Update On 2020-06-30 09:43 GMT
மேட்ச் பிக்சிங், ஊக்கமருந்து குற்றத்தைப்போல் இனவெறியுடன் பேசும் வீரர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 4 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.

இந்த நிலையில் ஜேசன் ஹோல்டர் மான்செஸ்டரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஊக்கமருந்து, மேட்ச் பிக்சிங் போன்றவற்றுக்கும், இனவெறியுடன் ஒரு வீரரை பேசுவதற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். இனவெறியுடன் சக வீரரை ஒரு வீரர் பேசினால், அதை ஊக்கமருந்து, மேட்ச் பிக்சிங் குற்றத்துக்கு இணையாகவே கருத வேண்டும்.

ஐ.சி.சி. விதிப்படி இனவெறிக் குற்றத்துக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை விதிக்க வேண்டும். முதல்முறையாக குற்றம்செய்தால் 4 சஸ்பென்சன் புள்ளிகள் வழங்க வேண்டும்.

இரு புள்ளிகளுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுவார். அந்த அடிப்படையில் இரு டெஸ்ட் அல்லது 4 ஒரு போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தொடருக்கும் முன்பு இனவெறிக்கு எதிரான விஷயங்களை வீரர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும். ஊக்கமருந்து குறித்தும், ஊழலுக்கு எதிரான விஷயங்கள் குறித்தும் போட்டித் தொடர் தொடங்கும் முன் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோல் இனவெறி பேச்சு குறித்தும் கூற வேண்டும். இதன் மூலம் வீரர்களுக்கு இனவெறி பேச்சு குறித்த அதிகமான விழிப்புணர்வு களத்தில் ஏற்படும்.

கறுப்பினத்தவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தீவிரமாக ஆதரவு அளிக்கும். அமெரிக்காவில் மட்டுமல்ல உலகில் எங்கு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக இயக்கம் நடந்தாலும் அதை ஆதரி்ப்போம். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதற்கான ஆதரவைத் தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிரிக்கெட்டில் நடைபெறும் இனவெறி  விவகாரத்தை சுட்டிக்காட்டி வருகிறார்கள். டேரன் சமி, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட வீரர்கள் தங்களுக்கு இனவெறி நடந்ததாக குற்றம்சாட்டி இருந்தனர்.
Tags:    

Similar News