செய்திகள்
ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யாவின் ஐ.பி.எல். வீரர்களை கொண்ட சிறந்த லெவன் அணிக்கு டோனி கேப்டன்

Published On 2020-06-04 09:56 GMT   |   Update On 2020-06-04 09:56 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட் லீக்கில் விளையாடிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கிய ஹர்திக் பாண்ட்யா, எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவின் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 12 சீசன் நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளை வைத்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிறந்த லெவனை (11 பேர்) தேர்வு செய்துள்ளார்.

டெலிவி‌ஷன் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் நடந்த உரையாடலின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ஹர்திக் பாண்ட்யா தனது சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனியை தனது ஐ.பி.எல். சிறந்த லெவனின் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ஏனென்றால் அவர் விளையாடும் மும்பை அணிக்கு ரோகித் சர்மா ஐ.பி.எல். கோப்பையை 4 முறை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் அவரை கேப்டனாக தேர்வு செய்யாமல், டோனியை கேப்டனாக செய்து இருக்கிறார்.

ஹர்திக் பாண்ட்யாவின் அணியில் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக உள்ளனர்.

பஞ்சாப் அணிக்காக விளையாடும் கெய்ல் 326 சிக்சர்கள் அடித்து, ஐ.பி.எல்.லில் அதிக சிக்ஸர் அடித்த வீரராக உள்ளார். ரோகித் சர்மா 4,898 ரன்கள் (188 ஆட்டம்) எடுத்து ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 3-வது இடத்தில் உள்ளார்.

பெங்களூர் ராயல் சேலஞ்சஸ் அணியின் கேப்டனான விராட் கோலி 3-வது வரிசைக்கும், அதே அணியில் ஆடும் டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 4-வது வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விராட் கோலி 177 ஆட்டத்தில் 5,412 ரன்கள் எடுத்து ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார். வெளிநாட்டு வீரர்களில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டி வில்லியர்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.

5-வது வரிசைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். அவர் ஐ.பி.எல்.லில் 5,368 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களில் 2-வது இடத்தில் உள்ளார்.

அதற்கு அடுத்த வரிசையில் விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டோனி 209 சிக்ஸர்கள் அடித்து 3-வது இடத்தில் இருக்கிறார். 7-வது வரிசைக்கு ஹர்திக் பாண்ட்யா அவரையே தேர்வு செய்து இருக்கிறார்.

சுழற்பந்து வீரர்களில் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரீன் (கொல்கத்தா அணி), ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் (ஐதராபாத்) ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும், மலிங்கா (இலங்கை) பும்ரா ஆகியோரை அவர் வேகப்பந்து வீச்சுக்கு தேர்வு செய்துள்ளார்.

இதில் மலிங்கா ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் ஆவார். அவர் 172 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்த ஐ.பி.எல். சிறந்த லெவன் வருமாறு:-

கிறிஸ் கெய்ல், ரோகித் சர்மா, வீராட் கோலி, டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, டோனி, (கேப்டன், விக்கெட் கீப்பர்) ஹர்திக் பாண்ட்யா சுனில் நரீன், ரஷித் கான், பும்ரா, மலிங்கா.
Tags:    

Similar News