செய்திகள்
கேல் ரத்னா விருது

கேல் ரத்னா விருது யாருக்கு கிடைக்கும்?: இதுவரை 6 பேர் பெயர் பரிந்துரை

Published On 2020-06-02 10:27 GMT   |   Update On 2020-06-02 10:27 GMT
மத்திய அரசால் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதாகும். அதற்கு அடுத்தபடியாக வீரர்-வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுக்கு தகுதியான வீரர்-வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. விருதுக்கு பரிந்துரை செய்வதற்கான கடைசி தினம் நாளை ஆகும்.

கேல் ரத்னா விருதுக்கு இதுவரை 6 பேர் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், குத்துச்சண்டை வீரர்கள் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் ஆகியோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான நபர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 நாட்கள் இருப்பதால் மேலும் சில பெயர்கள் பரிந்துரைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான போட்டி நிலவுவதால் கேல் ரத்னா விருது யாருக்கு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் வீரர்-வீராங்கனைகள் சாதித்த அளவை அடிப்படையாக வைத்து தேர்வு நடைபெறும்.

ரோகித் சர்மா கடந்த ஆண்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து இருக்கிறார். இதனால் அவருக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நீரஜ் சோப்ரா தொடர்ந்து 3-வது முறையாகவும், வினேஷ் போகத் 2-வது தடவையாகவும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 1991-1992-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இந்த விருதைப் பெற்றார். கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News