செய்திகள்
இயான் பிஷப், எம்எஸ் டோனி

கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் டோனி இருந்துள்ளார்: இயான் பிஷப்

Published On 2020-05-27 10:40 GMT   |   Update On 2020-05-27 10:40 GMT
தன்னுடைய கனவு அணிக்கு எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ள இயான் பிஷப், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கேப்டன் எனவும் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் கடந்த 10 ஆண்டில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு அணியை உருவாக்கியுள்ளார். அந்த ஒருநாள் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

இணையதளத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடனான உரையாடலில், தன்னுடைய தலைசிறந்த ஒருநாள் அணியின் விவரங்களை பகிர்ந்துகொண்டார். அதில் பிஷப் லெவனின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் இடம்பெறுகின்றனர்.

இவர்கள் இருவரும் 2019 உலகக்கோப்பையில் அதிக ரன்களை குவித்தவர்கள். இதற்கடுத்து 3-ம் நிலை வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் பிஷப். அதற்குக்காரணம் கோலியின் சீரான வேகத்தில் ரன் குவிக்கும் திறனே எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கடுத்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் அதிரடிக்கும் அதே சமயம் நிலையான ஆட்டத்துக்கும் சொந்தக்காரர்கள் என விளக்கமளித்துள்ளார்.

இதற்கடுத்தபடியாக ஆல் ரவுண்டர்களில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார். பின்பு விக்கெட் கீப்பராக எம்எஸ் டோனியை தேர்வு செய்துள்ள பிஷப் அவரை கேப்டனாகவும் அறிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் இருந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பிஷப் கனவு அணியின் பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், லசித் மலிங்கா, டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பிஷப் அணியின் ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத்கான் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
Tags:    

Similar News