செய்திகள்
வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி

சென்னையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

Published On 2020-05-26 07:35 GMT   |   Update On 2020-05-26 07:35 GMT
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், அர்ஜூனா விருதுக்கு சென்னையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் நம்பர்-1 வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி, சென்னையைச் சேர்ந்த இவர் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெல்ஜியம், ஐஸ்லாந்தில் நடந்த சாட்டிலைட் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில், வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதற்காக அவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலா ஜனோடியிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக சென்னை திரும்பிய அவர் வீட்டில் வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டார். 4-வது கட்ட ஊரடங்கில் கிடைத்த தளர்வு நம்பிக்கை அளிக்க அவர் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், அர்ஜூனா விருதுக்கு பவானி தேவியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வாள்வீச்சு சம்மேளனம் இதை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கூறும் போது:-

அர்ஜூனா விருதுக்கு பவானி தேவி பெயரை பரிந்துரை செய்துள்ளது. இதற்கான தகுதி அவருக்கு உள்ளது. இந்த விருது பவானி தேவிக்கு கிடைக்கும் பட்சத்தில் 2024, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எங்களது உத்தேசத் திட்டத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த விளையாட்டு இந்தியா முழுவதும் பரவ காரணமாக அமையும் என்றார். பவானி தேவி உலக தரவரிசையில் சபரே பிரிவில் 45-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News