செய்திகள்
இலங்கை அணி வீரர்கள்

இலங்கை தொடரை ரத்து செய்ய வேண்டாம் - இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை

Published On 2020-05-16 09:10 GMT   |   Update On 2020-05-16 09:10 GMT
3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு:

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் நடைபெறுவது சந்தேகமாக உள்ளது.

இந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் இந்த தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) இலங்கை கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ-க்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-

ஜூலை மாத இறுதியில் இலங்கை இந்தியா தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுங்கள். இதற்காக வீரர்கள் தனிமைப்படுத்துதல், ரசிகர்களின் நலனுக்காக காலி மைதானத்தில் கூட போட்டிகள் நடத்த தயாராக உள்ளோம். தயவுசெய்து இந்த தொடரை ரத்து செய்து விடாதீர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ. விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டதால் இலங்கைக்கு ஏற்கனவே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியும் பயணத்தை ரத்து செய்தால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்படும். இதன் காரணமாகவே தொடரை ரத்து செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். போட்டியை நடத்த தயார் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News