செய்திகள்
பிசிசிஐ

ஆஸி. தொடருக்காக இந்திய வீரர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள்: பிசிசிஐ

Published On 2020-05-08 08:56 GMT   |   Update On 2020-05-08 08:56 GMT
தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் - ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர்கள் நடைபெறாமல் போனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு சுமார் ரூ. 1,480 கோடி (196 மில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்படும்.

எனினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலிய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை மந்திரி ரிச்சர்ட் கோல்பெக் கூறினார். இந்தியாவும் ஆஸ்திரேலியா தொடரை இழக்க விரும்பாது. ஒருவேளை தொடரை காப்பாற்றுவதற்காக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது,

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமல் கூறியதாவது:-

கிரிக்கெட் ஆட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியாவில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்  கொள்ள வேண்டிய நிலைமை எல்லோருக்கும் உள்ளது. ஊரடங்கிலிருந்து வெளியே வந்து இன்னொரு நாட்டில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வது என்பது நல்ல விஷயம்தான். ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.



இரு அணிகளும் 5 டெஸ்டுகள் விளையாட வேண்டும் என்பது ஊரடங்குக்கு முன்னால் பேசப்பட்டது. ஊரடங்கால் நிறைய நஷ்டம் ஏற்பட்டதால் ஒருநாள், டி20 ஆட்டங்களை அதிகமாக நடத்தி கூடுதல் வருமானம் பார்க்க வேண்டும் என்றுதான் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News