செய்திகள்
கேஎல் ராகுல்

பந்தை தவறவிட்டால், உங்களால் டோனி ஆக முடியாது என்று ரசிகர்கள் உணர்கிறார்கள்: கேஎல் ராகுல்

Published On 2020-04-27 11:19 GMT   |   Update On 2020-04-27 11:19 GMT
எம்எஸ் டோனியுடன் ஒப்பிட்டு பார்ப்பதுதான் ஒரே பிரச்சனை என்று விக்கெட் கீப்பராக பணியாற்றும் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த எம்எஸ் டோனிக்கு பதில் மாற்று விக்கெட் கீப்பரை இந்திய அணி நிர்வாகம் தேடிவருகிறது. இளம் வீரரான ரிஷப் பண்ட்-ஐ தயார் படுத்தியது. ஆனால் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் சொதப்பியதால் இந்தியா விளையாடிய கடைசி இரண்டு மூன்று தொடர்களில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக களம் இறக்கியது.

அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதுடன் விக்கெட் கீப்பர் பணியையும் நன்றாக செய்து வருகிறார். இதனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

எம்எஸ் டோனிக்கு அடுத்து யார் விக்கெட் கீப்பராக செயல்பட்டாலும், விக்கெட் கீப்பிங் பணியில் பந்தை தவற விட்டால், இவரால் எம்எஸ் டோனி ஆக இயலாது என்று ரசிகர்கள் ஒப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதுதான் பிரச்சனை என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களுக்கு நான் நீண்ட காலமாக விக்கெட் கீப்பர் பணியில் இருந்து விலகி இருக்கவில்லை என்பது தெரியும். ஐபிஎல் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன். கர்நாடகா அணிக்காக விளையாடிய போதெல்லாம் விக்கெட் கீப்பிங் பணியை செய்துள்ளேன்.

நான் எப்போதும் விக்கெட் கீப்பர் பணியில் என்னை தொடர்பு படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் போன்ற ஒருவர் அணிக்கு தேவை என்று நிர்வாகம் நினைத்தால் அதற்கு நான் தயாராக .இருக்கிறேன் என்பதை எப்போதுமே சொல்லி வருகிறேன்.



இந்திய அணிக்காக நான் விக்கெட் கீப்பராக பணியாற்றும்போது சற்று பதற்றம் அடைவேன். ஏனென்றால் ரசிகர்களிடம் இருந்து நெருக்கடி ஏற்படும். நான் ஒரு பந்தை தவறவிட்டால் கூட, ரசிர்கள் இவர் எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக முடியாது என்று உணர்கிறார்கள். எம்எஸ் டோனி போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு மாற்று நபராக வரும்போது அவர்களுக்கு நெருக்கடி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News