செய்திகள்
நெய்மர்

பார்சிலோனாவுக்காக 26 மில்லியன் பவுண்டு சம்பளத்தை நெய்மர் விட்டுக்கொடுப்பாரா?

Published On 2020-04-22 20:24 IST   |   Update On 2020-04-22 20:24:00 IST
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பினால் 26 மில்லியன் பவுண்டு அளவிலான சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பார்சிலோனா அணியில் இருந்து பிஎஸ்ஜி அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். கால்பந்து வரலாற்றில் அதுவரை இல்லாத அளவிற்கு 198 மில்லியன் பவுண்டுக்கு பிஎஸ்ஜி அவரை வாங்கியது.

பார்சிலோனா அணி நெய்மரை டிரான்ஸ்பரை தடுக்க எவ்வளவோ முயன்றது. ஆனால் நெய்மர் வெளியேறுவதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவரை விடுவித்தது.

பிஎஸ்ஜி அவருக்கு போதுமான அளவிற்கு சம்பளம் கொடுத்தாலும் பார்சிலோனா அணியில் விளையாடிய அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப முடிவு செய்தார். நெய்மர் வருவதை மெஸ்சியும் வரவேற்றார்.

ஆனால் பிஎஸ்ஜி நெய்மரை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் பார்சிலோனாவுக்கு செல்லும் முயற்சியில் உறுதியாக உள்ளார். ஆனால் பிஎஸ்ஜி சம்பளத்தை அதிகப்படுத்தி அவரை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறது.

தற்போது வாரத்திற்கு ஆறு லட்சம் பவுண்டு சம்பளமாக கொடுக்கிறது. இதை மேலும் அதிகரித்து கொடுக்க தயாராக இருக்கிறது. 2020-2021 சீசனில் 12 மில்லியன் பவுண்டு ஸ்பான்சர்ஷிப்புடன் சேர்த்து 44 மில்லியன் டாலர் சம்பளம் நெய்மருக்கு கிடைக்கும்.

பார்சிலோனா அவருக்கு 18 மில்லியன் பவுண்டுதான் சம்பளமாக கொடுக்க முடியும். இதனால் நெய்மர் பார்சிலோனாவுக்கு வர விரும்பினால் 26 மில்லியன் பவுண்டு சம்பளத்தை இழக்க நேரிடும். ஒருவேளை நெய்மர் பிஎஸ்ஜி அணியில் இருந்தால், மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இணையான சம்பளம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News