செய்திகள்
கபில்தேவ்

தற்போது மக்களை காப்பாற்றும் ஒரே எண்ணத்தில்தான் செயல்பட வேண்டும்: அக்தருக்கு கபில்தேவ் பதில்

Published On 2020-04-09 14:57 GMT   |   Update On 2020-04-09 14:57 GMT
இந்தயா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தி நிதி திரட்டலாம் என்ற சோயிப் அக்தர் கருத்துக்கு கபில்தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆட்கொல்லி நோயானா கொரோனா வைரசுக்கு ஆசிய நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதற்காக இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள இந்த கடினமான காலக்கட்டத்தில், நலநிதி திரட்டுவதற்காக இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இதனால் இரு நாட்டினருமே கவலைப்படமாட்டார்கள். விராட் கோலி (இந்திய கேப்டன்) சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் (பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன்) சதம் கண்டால் நீங்கள் உற்சாகமடையுங்கள். களத்தில் எந்த முடிவு கிடைத்தாலும் இரு அணிகளுமே வெற்றியாளர்கள்தான். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, இரு நாடுகளும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு சோயிப் அக்தர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அக்தரின் கோரிக்கை கபில்தேவ் முற்றிலும் நிராகரித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் ஏழைமக்களின் உயிரை காப்பாற்றுவதுதான் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு பணம் தேவையில்லை. சோயிப் அக்தர் அவரது கருத்தை தெரிவித்திருக்கலாம். ஆனால், நமக்கு (இந்தியா) பணம் தேவையில்லை. அதுபோதுமான அளவு உள்ளது. எங்களை பொறுத்தவரைக்கும் தற்போது அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதுதான் முக்கியம். தொலைக்காட்சியில் அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை வீசுவதை பார்த்து வருகிறேன். தை நிறுத்துவது அவசியம்.

ஏற்கனவே பிசிசிஐ 51 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. தேவை அதிகரித்தால் இன்னும் அதிகமாக வழங்கும். இது நிதியை பெறுக்குவதற்கான நிலை அல்ல. நிலைமை தற்போது நல்ல நிலைமைக்கு திரும்ப வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வீரர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் நிலைக்கு ஆளாகக்கூடாது.

நிலைமை சரியான பின்னர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும். நாட்டை விட கிரிக்கெட் மிகப்பெரியது அல்ல. ஏழை மக்கள், மருத்துவமனை ஊழியர்ள், போலீஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மக்கள்தான் இந்த போரில் முன்னிலை வகிக்கிறார்கள்.’’ என்றார்.
Tags:    

Similar News