செய்திகள்
விராட் கோலி

எனக்கு பிடித்தமான 2 பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி ருசிகர பதில்

Published On 2020-04-04 07:06 GMT   |   Update On 2020-04-04 07:06 GMT
கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான இரண்டு பேட்ஸ்மேன்கள் டோனி, டிவில்லியர்ஸ் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ஜாலியாக கலந்துரையாடினார். அப்போது பீட்டர்சன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது:

கேள்வி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்னும் ஏன் ஒரு ஐ.பி.எல். கோப்பையை கூட வெல்லவில்லை?

பதில்: எங்கள் அணியில் மிகப்பெரிய வீரர்கள் உள்ளனர். நட்சத்திர வீரர்கள் இருக்கும் போது அந்த அணி மீது எப்போதும் அதிக எதிர்பார்ப்பும், கவனமும் வந்து விடுகிறது. மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம். சிறந்த அணியாக இருந்த போதிலும் ஒரு முறை கூட வாகை சூடவில்லை. இதே போல் மூன்று முறை பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளோம். கோப்பையை வெல்லாத வரை இவை எல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே எங்களது குறிக்கோள். அதற்கு நாங்கள் தகுதியான அணி. சில சமயம் கோப்பையை பற்றி பேசியே கூடுதல் நெருக்கடி உருவாகி விடுகிறது. எனவே நெருக்கடியை எடுத்துக் கொள்ளாமல், உற்சாகமாக விளையாட வேண்டியது முக்கியம்.

கேள்வி: ஐ.பி.எல்.-ல் உங்களது ஜாலியான இன்னிங்ஸ் எது?

பதில்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஒரு ஆட்டம் (2016-ம் ஆண்டு) மழையால் பாதிக்கப்பட்டு 14 அல்லது 15 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்டத்தில் களம் இறங்கி 12-வது ஓவரிலேயே சதம் (50 பந்தில் 113 ரன்) அடித்து விட்டேன். பந்தை சிறந்த முறையில் விரட்டியடித்தேன். எல்லா பந்தும் பேட்டில் சரியாக ‘கிளிக்’ ஆனது. இதில் என்னை அவர்களால் அவுட் ஆக்க முடியாது என்பது போல் உணர்ந்தேன். இப்படியொரு எண்ணம் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. எனக்கு பிடித்த மிகவும் ஜாலியான இன்னிங்சாக இதை கருதுகிறேன்.

கேள்வி: பேட்டிங்கின் போது உங்களுக்கு பிடித்தமான இணை ஆட்டக்காரர்கள் யார்?



பதில்: இரண்டு வீரர்களுடன் இணைந்து ஆடும் போது மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து பேட்டிங் செய்திருக்கிறேன். அவர்களுடன் ஆடும் போது களத்தில் ரன் எடுக்க படுவேகமாக ஓடியிருக்கிறேன். எங்களுக்குள் தெளிவான புரிந்துணர்வு இருந்துள்ளது. அவர்கள் வேறுயாருமில்லை, ஒருவர் இந்திய வீரர் டோனி. மற்றொரு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் டிவில்லியர்ஸ். நாங்கள் பேட்டிங் செய்யும் போது அதிகமாக பேசிக்கொள்வது கூட கிடையாது. பார்வையிலேயே புரிந்து கொள்கிறோம்.



கேள்வி: கிரிக்கெட்டில் உங்களுக்கு எந்த வடிவிலான போட்டி பிடிக்கும்?

பதில்: டெஸ்ட் கிரிக்கெட் தான். இதை பல தடவை சொல்வேன். என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. ரன் எடுக்காத போதிலும் ஓட்டலுக்கு திரும்பி விட்டு அடுத்த நாள் உடனடியாக போட்டிக்கு தயாராக இருக்க வேண்டும். இது தான் வாழ்க்கை. அது தான் என்னை சிறந்த மனிதராக மாற்றியது.

கேள்வி: உங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தருணம்?

பதில்: 2014-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர் மோசமான நாட்களாக அமைந்தது. இந்த தொடரில் நான் சோபிக்க (5 டெஸ்டில் 134 ரன்) தவறினேன். அணிக்கு என்ன தேவை என்பதை விட எனது தனிப்பட்ட ஆட்டத்தில் ரொம்ப கவனம் செலுத்தி விளையாடியதால் வந்த தடுமாற்றம் அது. என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கிய தொடர்.

கேள்வி: நீங்கள் திடீரென சைவத்துக்கு மாறியது ஏன்?

பதில்: 2018-ம் ஆண்டுக்கு முன்பு வரை அசைவப் பிரியராகத் தான் இருந்தேன். 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கழுத்து எலும்பில் பிரச்சினை ஏற்பட்டது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்தேன். பரிசோதனையில் எனது உடல் யூரிக் அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்தது தெரியவந்தது. உடலில் அளவுக்கு அதிகமாக அமிலத்தன்மை இருந்தது. மாத்திரை சாப்பிட்டும் உடனடியாக சீராகவில்லை. எலும்பில் உள்ள கால்சியத்தை உடல் எடுத்துக் கொள்ள தொடங்கியதால் எலும்பும் பலவீனமடைந்தது. இதனால் அடுத்து நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இறைச்சி உள்ளிட்ட அசைவம் சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திக் கொண்டேன். அதற்குரிய பலன் உடனே தெரிந்தது. உடலில் யூரிக் அமிலம் பிரச்சினை தீர்ந்தது. உடலில் புதிய மாற்றத்தை உணர்ந்தேன். காலையில் எழும் போது முன்பை விட மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்ந்தேன். போட்டியில் ஆடி விட்டு சோர்வடையும் போது அதில் இருந்து விரைவாக மீள முடிகிறது. எனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு இது. சொல்லப்போனால் சைவ உணவு பழக்கத்துக்கு ஏன் முன்பே மாறவில்லை என்று நினைப்பது உண்டு.

கேள்வி: இந்தியாவில் தற்போது எந்த மாதிரியான சூழல் உள்ளது?

பதில்: கொரோனா தடுப்பு பணியில் எங்களது பொறுப்புணர்வு நன்றாக உள்ளது. ஒரு சில நபர்கள் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அது எப்படி நடந்தது என்பது தெரியாது. ஆனால் மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு வழிகாட்டுதல்களை கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தை கையாள்வதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு கோலி கூறினார்.

மேலும் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த கோலி, ‘கால்பந்து உலகில் லயோனல் மெஸ்சியை விட கிறிஸ்டியானா ரொனால்டோவை ரொம்ப பிடிக்கும், தாடியை மழித்து விட்டால் முகம் அழகாக இருக்காது. அதனால் தாடியை ஒரு போதும் எடுக்க மாட்டேன், 2011-ம் ஆண்டு இந்தியாவில் உலக கோப்பையை வென்றது மறக்க முடியாது தருணம், இதுவரை நான் விளையாடாத விளையாட்டுகளில் கோல்ப்பும் ஒன்று’ என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News