செய்திகள்
பிரையன் லாரா

கேஎல் ராகுலின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்: பிரையன் லாரா

Published On 2020-03-11 12:51 GMT   |   Update On 2020-03-11 12:51 GMT
இந்திய பேட்ஸ்மேன் கேஎல் ராகுலின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக அறிமுகம் ஆனவர் கேஎல் ராகுல். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து தொடருக்குப்பின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பிடித்துள்ளார். இரண்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

விக்கெட் கீப்பர் பணியையும் சேர்ந்து கவனிப்பதால் அவரை மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கி விளையாட அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

விரைவில் டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம் பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேஎல் ராகுலின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

கேஎல் ராகுல் குறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவருடைய ஆட்ட நுணுக்கம், அவர் பேட்டிங் செய்வதை நான் பார்த்த வகையில் எந்த அணிக்கு எதிராகவும் அவருக்கு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கான திறனை பெற்றுள்ளார். அவரது இடத்தை தற்காத்துக் கொள்ளும் திறனையும் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்குப் பிறகு முதல் நபராக அவரது பெயரை என்னால் தெரிவிக்க முடியும். எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் கேஎல் ராகுல்’’ என்றார்.
Tags:    

Similar News