செய்திகள்
ஐபிஎல் 2020

கொரோனா பீதி: ஐ.பி.எல். போட்டிக்கு தடைவிதிக்க கோரி வழக்கு- ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Published On 2020-03-11 08:02 GMT   |   Update On 2020-03-11 08:02 GMT
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளது நிலையில் ஐபிஎல் போட்டிக்கு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பலரை தாக்கியுள்ளது.

தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவிலும் பலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. உலகத்தையே இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

இந்த போட்டிக்கு தடைவிதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதில் 3 ஆயிரத்து 497 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் வேகமாக பரவி, மனித இனத்துக்கு மிகப்பெரிய சவாலாக திகழும் இந்த வைரஸ் நோய்க்கு மருந்து இல்லை.

மிகப்பெரிய அளவில் அழிவை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஐ.எப்.எல். என்ற கால்பந்து விளையாட்டு போட்டி  தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்தி வருகிறது. நடப்பாண்டில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டியை சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஒரே மைதானத்தில் பார்வையிடுவார்கள்.

இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் இருந்தால், இந்த வைரஸ் வேகமாக பிறருக்கு பரவ தொடங்கிவிடும். இதனால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.

எனவே, இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடத்த உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும். இந்த போட்டியை நடத்த அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News