செய்திகள்
மைதானத்தில் கண்ணீர் விட்ட இந்திய வீராங்கனைகள்

இறுதிப் போட்டியில் தோல்வி - மைதானத்தில் கண்ணீர் விட்ட இந்திய வீராங்கனைகள்

Published On 2020-03-09 05:30 GMT   |   Update On 2020-03-09 05:30 GMT
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த சோகத்தில் இந்திய வீராங்கனைகள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.
மெல்போர்ன்:

மகளிர் 20 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா 5-வது முறையாக கைப்பற்றியது.

மெல்போர்னில் நடந்த மகளிர் உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது பின்னர் ஆடிய இந்தியா 19.1 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 85 ரன்னில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

அந்த அணி 5-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு 2010, 2012, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது.

இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்து உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனது.

இந்த தோல்வியால் இந்திய வீராங்கனைகள் மைதானத்தில் சோகமாக இருந்தனர். சில வீராங்கனைகள் சோகத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். ஜெமீமா ரோட்ரிக்ஸ், ராதாயாதவ் ஆகியோர் பரிசளிப்பு விழாவில் கண்ணீர் விட்டனர்.



கேட்சை விட்டதற்காக தொடக்க வீராங்கனை ஷிபாலி வர்மா கண்ணீர் விட்டு கதறினார். அவரை சக வீராங்கனைகள் அமைதிப்படுத்தினர்.

இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் கூறியதாவது:-

‘லீக்‘ சுற்றில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இறுதிப் போட்டியில் கேட்ச்சுகளை தவற விட்டோம். இந்த தோல்வியில் இருந்து நாங்கள் பாடம் கற்றோம்.

இந்திய அணி மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுவோம். பெரிய போட்டிகளில் எவ்வாறு சிறப்பாக ஆட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

‌ஷபாலி வர்மாவுக்கு 16 வயதுதான் ஆகிறது. அவருக்கு இது முதல் உலக கோப்பையாகும். அவர் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக ஆடினார். இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அவரை குற்றம் சாட்ட வேண்டாம்.

இவ்வாறு ஹர்மன்பிரீத் கவூர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News