செய்திகள்
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் - மேகன்

ஷபாலி, மந்தனாவுக்கு ‘பவர்-பிளே’யில் பந்து வீச விரும்பவில்லை- ஆஸ்திரேலிய வீராங்கனை அச்சம்

Published On 2020-03-07 05:08 GMT   |   Update On 2020-03-07 05:08 GMT
‘பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அதிரடி வீராங்கனைகள் ஷபாலி, மந்தனாவுக்கு எதிராக பவர்-பிளே சமயத்தில் பந்து வீச விரும்பவில்லை’ என்று ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் கூறியுள்ளார்.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது.

மெல்போர்னில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அரையிறுதி மழையால் பாதிக்கப்பட்டது போல் இறுதிஆட்டத்துக்கு மழை ஆபத்து இல்லை என்று அங்கு வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை மழை குறுக்கிட்டாலும் மாற்று நாள் (ரிசர்வ் டே) இருக்கிறது. நேற்று வரை இந்த ஆட்டத்துக்கு 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இதனால் அதிக ரசிகர்கள் பார்க்கும் பெண்கள் போட்டியாக இது அமையும் என்று கருதப்படுகிறது.

இதையொட்டி நடப்பு தொடரில் இதுவரை 9 விக்கெட்கள் கைப்பற்றி இருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான மேகன் ஷூட் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சொல்லப்போனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் வெறுக்கிறேன். எனது பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக இந்திய தொடக்க வீராங்கனைகள் மந்தனாவும், ஷபாலி வர்மாவும் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் எனது பந்து வீச்சில் ஷபாலி பிரமாதமான ஒரு சிக்சர் தூக்கினார். அனேகமாக எனது பந்து வீச்சில் விரட்டப்பட்ட மிகப்பெரிய சிக்சராக அது இருந்தது.

அவர்களை மீண்டும் சந்திக்கும் நிலையில் சில திட்டங்களை வகுத்துள்ளோம். ஆனால் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) மந்தனா, ஷபாலிக்கு எதிராக நான் பந்து வீசுவது சரியானதாக இருக்காது. ஏனெனில் அவர்கள் எனது பவுலிங்கை எளிதில் அடிக்க பழகி விட்டனர்.

இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் நீண்ட காலமாகவே பேசிக்கொண்டு இருக்கிறோம். அதற்கு ஏற்றவாறு தான் முத்தரப்பு 20 ஓவர் தொடரை கருதி விளையாடினோம்.

அண்மை காலமாக குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி விட்டு அவர்களையே இறுதி ஆட்டத்திலும் சந்திப்பது ஒரு வகையில் நல்ல விஷயம் தான். அவர்களுக்கும் அப்படி தான் இருக்கும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு மேகன் ஷூட் கூறினார்.

இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது. இதில் மேகன் ஷூட்டின் முதல் ஓவரிலேயே ஷபாலி 4 பவுண்டரிகள் விரட்டியது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் கிம் காட்டன், பாகிஸ்தானின் ஆசன் ராசா ஆகியோர் கள நடுவர்களாக பணியாற்றுவார்கள் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது. டி.வி. நடுவராக வெஸ்ட் இண்டீசின் கிரிகோரி பிராத்வெய்ட் செயல்படுவார். 
Tags:    

Similar News