செய்திகள்
சதம் அடித்த குஜராத் வீரர் கலேரியா

ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டங்கள்: 2-ம் நாள் ஆட்டம் அப்டேட்....

Published On 2020-02-21 13:21 GMT   |   Update On 2020-02-21 13:21 GMT
ஜம்மு-காஷ்மீர் - கர்நாடகா இடையிலான 2-ம் நாள் ஆட்டம் நடைபெறாத நிலையில் குஜராத் முதல் இன்னிங்சில் 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. பெங்கால் - ஒடிசா இடையிலான ஆட்டத்தில் பெங்கால் முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்திருந்தது. மஜும்தார் 136 ரன்னுடனும், ஷபாஸ் அகமது 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மஜும்தார் 157 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் ஷபாஸ் அகமது நேற்றைய ரன்னிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த இருவரும் உடனடியாக வெளியேற பெங்கால் முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இன்று 24 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் ஒடிசா முதல் இன்னிங்சை தொடங்கியது தொடக்க வீரர் சாந்தனு மிஷ்ரா 62 ரன்களும், அடுத்து வந்த சமந்த்ரே 68 ரன்களும் அடித்தனர். இருவரின் அரைசதத்தால் ஒடிசா 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

குஜராத் - கோவா இடையிலான போட்டியில் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 அடித்திருந்தது. பார்தீவ் பட்டேல் 118 ரன்களுடனும், காந்தி 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பார்தீவ் பட்டேல் 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். காந்தி 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கலேரியா ஆட்டமிழக்காமல் 118 ரன்களும், அக்சார் பட்டேல் 80 ரன்களும் அடிக்க குஜராத் 8 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் ஒடிசா முதல் இன்னிங்சை தொடங்கியது. கோவா அணியின் தொடக்க வீரர்கள் ரன்கள் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த பட்டேல் (15), அமித் வர்மா (31) மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்ள கோவா 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

சவுராஷ்டிரா - ஆந்திரா இடையிலான ஆட்டத்தில் சவுராஷ்டிரா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. ஜானி 53 ரன்னுடனும், மன்கட் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜானி சிறப்பாக விளையாடி 121 ரன்கள் குவித்தார். மன்கட் 80 ரன்கள் அடிக்க சவுராஷ்டிரா 419 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆந்திரா முதல் இன்னிங்சை தொடங்கியது. 22 ஓவரில் 40 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஞானேஸ்வரன் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

கர்நாடகா - ஜம்மு-காஷ்மீர் இடையிலான ஆட்டத்தின் முதல் நாளில் கர்நாடகா 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழையால் மைதானம் மோசமாகியிருந்ததால் இன்று ஒன்று பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News