செய்திகள்
33 பந்தில் 59 ரன்கள் விளாசிய அசாம் கான்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி

Published On 2020-02-21 10:32 GMT   |   Update On 2020-02-21 10:32 GMT
கராச்சியில் நேற்று தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முதல் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தியது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கராச்சியில் நேற்று தொடங்கியது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குவெட்டா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இஸ்லாமாபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் பந்தை சந்தித்த கொலின் முன்றோ பந்து வீச்சாளர் முகமது நவாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரோஞ்சி 23 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து வந்த தாவித் மலன் 40 பந்தில் 64 ரன்கள் விளாசினார். ஆஷிப் அலி 13 பந்தில் 19 ரன்களும், பஹீம் அஷ்ரப் 8 பந்தில் 20 ரன்களும் அடிக்க இஸ்லாமாபாத் யுனைடெட் 19.1 ஓவரில் 168 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. குவெட்டா அணியின் முகமது ஹஸ்னைன் நான்கு விக்கெட்டும், பென் கட்டிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி களம் இறங்கியது. ஜேசன் ராய் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். வாட்சன் 15 ரன்னிலும், அகமது ஷேசாத் 7 ரன்னிலும், சர்பராஸ் அகமது 21 ரன்னிலும் வெளியேறினார்.

அடுத்து வந்த அசாம் கான் 33 பந்தில் 59 ரன்கள் விளாசினார். முகமது நவாஸ் 13 பந்தில் 23 ரன்களும், பென் கட்டிங் ஆட்டமிழக்காமல் 12 பந்தில் 22 ரன்களும் அடிக்க குவெட்டா அணி 18.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றிய முகமது குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் முகமது ஹஸ்னைன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Tags:    

Similar News