செய்திகள்
பிசிசிஐ வேண்டுகோளை நிராகரித்தது ஐசிசி

பிசிசிஐ-யின் வேண்டுகோளை நிராகரித்தது ஐசிசி

Published On 2020-02-14 13:41 GMT   |   Update On 2020-02-14 13:41 GMT
ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் நாளன்று கூட்டம் நடைபெற இருப்பதால், அதை தள்ளி வைக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது.
ஐசிசி முக்கியமான உயர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 2023 முதல் 2031 வரையிலான டெஸ்ட் போட்டி அட்டவணையை நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதேவேளையில் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் 29-ந்தேதி நடக்கும் என பிசிசிஐ தலைவர் அறிவித்துள்ளார். தொடர் தொடங்கும் நாளில் பிசிசிஐ தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இங்கே இருக்க வேண்டும். அதனால் ஐசிசி கூட்டத்திற்கான தேதியை தள்ளி வையுங்கள் என்று பிசிசிஐ வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் பிசிசிஐ-யின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது. கூட்டத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் போட்டியின் தொடக்க நாள் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags:    

Similar News