செய்திகள்
கோப்பையுடன் விராட் கோலி, பொல்லார்டு

3வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்

Published On 2019-12-22 03:33 GMT   |   Update On 2019-12-22 03:33 GMT
ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று மதியம் கட்டாக்கில் வெஸ்ட் இண்டீசுடன் 3-வது போட்டியில் மோதுகிறது.
கட்டாக்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த ஆண்டில் இந்திய அணி விளையாட உள்ள கடைசி சர்வதேச போட்டி இது.

தொடக்க ஆட்டத்தில் தடுமாறிய இந்திய அணி விசாகப்பட்டினத்தில் எழுச்சி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (159 ரன்), லோகேஷ் ராகுல் (102 ரன்) சதம் அடித்தனர். ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் அய்யரும் நொறுக்க இந்திய அணி 387 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியது இன்னொரு சிறப்பு அம்சமாக அமைந்தது.

இந்தியா அணியின் தொடர்ந்து பீல்டிங் தான் கவலைக்குரியதாக உள்ளது. இரு ஆட்டங்களிலும் முக்கிய தருணங்களில் இந்திய பீல்டர்கள் கேட்ச்களை கோட்டை விட்டனர். தவறுகளை திருத்திக் கொண்டு பீல்டிங்கில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

முதுகுவலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக 27 வயதான நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அறிமுக வீரராக களம் காண வாய்ப்புள்ளது.

கேப்டன் விராட் கோலி முதல் 2 ஆட்டங்களில் (4, 0) சொதப்பினார். மேலும் இந்த மைதானத்தில் அவர் இதுவரை (3 ஒரு நாள் ஆட்டங்களில் முறையே 3, 22, 8 ரன்) ஜொலித்ததில்லை. இந்த சோகத்துக்கு முடிவு கட்டி இந்த ஆட்டத்தில் அவர் ரன்மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். மொத்தத்தில் பலம் வாய்ந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால், ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக கைப்பற்றிய 10-வது தொடராக பதிவாகும்.

திடீரென விசுவரூபம் எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் சதம் விளாசிய ஹெட்மயர் (139 ரன்) மற்றும் ஷாய் ஹோப் (102, 78 ரன்), நிகோலஸ் பூரன் (29, 75 ரன்) ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். கேப்டன் பொல்லார்ட்டும் அதிரடி காட்டுவதில் சளைத்தவர் அல்ல. பந்து வீச்சில் ஷெல்டன் காட்ரெல் அச்சுறுத்துகிறார். ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.8½ கோடிக்கு விலை போன (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) உற்சாகத்துடன் காட்ரெல் களம் இறங்குவார். 

அந்த அணி இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை வென்று 13 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் படையினர் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், நிகோலஸ் பூரன், பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், கேரி பியர் அல்லது ஹேடன் வால்ஷ், காட்ரெல்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Tags:    

Similar News