செய்திகள்
முதல் விக்கெட்டுக்கு 278 ரன் எடுத்த ஷான் மசூத், அபித் அலி ஜோடி

கராச்சி டெஸ்ட் - தொடக்க ஆட்டக்காரர்களின் அபார சதத்தால் பாகிஸ்தான் வலுவான முன்னிலை

Published On 2019-12-21 14:06 GMT   |   Update On 2019-12-21 14:06 GMT
கராச்சியில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர்களின் அபாரமான சதத்தால் பாகிஸ்தான் அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
கராச்சி:

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ்வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்டது. பாபர் அசாம் 60 ரன்னும், ஆசாத் ஷபிக் 63 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இலங்கை சார்பில் லஹிரு குமார மற்றும் லசித் எம்புடெனியா ஆகியோர் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் அடித்தார். அவர் 74 ரன்னில் அவுட்டானார். தனஞ்ஜெயா டி சில்வா 32 ரன்னும், தில்ருவான் பெரேரா 48 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இலங்கை அணி 85.5 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

பாகிஸ்தான் சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை ஆடியது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 21 ரன்னுடனும், அபித் அலி 32 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களை பிரிக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தனர். ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். ஷான் மசூத் 135 ரன்னும், அபித் அலி 174 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அசார் அலி 57 ரன்னும், பாபர் அசாம் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் 2 நாள்கள் மீதமுள்ள நிலையில், இலங்கை அணியை விட 315 ரன்கள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News