செய்திகள்
பியூஷ் சாவ்லா

சிஎஸ்கே-யிடம் இதற்கு மேல் ஏதும் கேட்க முடியாது: ரூ.6.75 கோடிக்கு எடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லா

Published On 2019-12-20 10:34 GMT   |   Update On 2019-12-20 12:35 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லா, இதைவிட சிறந்தது இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த பியூஷ் சாவ்லாவை அந்த அணி விடுவித்தது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

30 வயதாகும் பியூஷ் சாவ்லாவை இவ்வளவு பணம் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கும் என்று யாரும் நினைக்கவில்லை. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கரண் சர்மா, ஜடேஜா ஆகிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

என்றாலும் வலது கை லெக்-பிரேக் பந்து வீச்சாளரை தேர்வு செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியாயப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், எம்எஸ் டோனியை விட சிறந்த காம்பினேசன் இருக்க முடியாது என்று பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பியூஷ் சாவ்லா கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை விடவும், எம்எஸ் டோனி தலைமையின் கீழ் விளையாடுவதை விடவும் சிறந்தது ஏதும் இருக்க முடியாது.

யாராக இருந்தாலும் ஒரு வீரராக சிறந்த அணியில் இடம் பிடித்து அந்த அணிக்காக விளையாடத்தான் விரும்புவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏலம் எடுத்தபின், அதைவிட மேலும் அந்த அணியிடம் ஏதும் கேட்க முடியாது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என்னை விடுவித்தது காம்பினேசனை பொறுத்து இருந்திருக்கலாம். அந்த அணி வேறு மாதிரியான காம்பினேசனை நினைத்திருக்கலாம். தற்போதைய ஈடன் கார்டன் ஆடுகளம், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவானதாக இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News