செய்திகள்
வில்லியம்சன் - டெய்லர்

இங்கிலாந்துக்கு எதிராக வில்லியம்சன், டெய்லர் சதம் - டெஸ்ட் டிரா ஆனது

Published On 2019-12-03 05:34 GMT   |   Update On 2019-12-03 05:34 GMT
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரா ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஹேமில்டன்:

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடந்தது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ரன் எடுத்தது. இதற்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 476 ரன் குவித்தது.

101 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 37 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆடியது.

வில்லியம்சனும், டெய்லரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். முதலில் வில்லியம்சன் 231 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 21-வது செஞ்சூரி ஆகும்.

அதைத்தொடர்ந்து டெய்லர் 184 பந்துகளில் 100 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரியும், 2 சிக்சர்களும் அடங்கும். சிக்சர் மூலம் அவர் சதத்தை தொட்டார். 96-வது டெஸ்டில் விளையாடும் டெய்லருக்கு 19-வது சதம் ஆகும். டெஸ்டில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதல் 2 இடங்களில் அவர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதோடு போட்டி முடிந்து டெஸ்ட் டிரா ஆனது. வில்லியம்சன் 104 ரன்னிலும், டெய்லர் 105 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்தடெஸ்டில் மொத்தம் 5 சதம் அடிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் லாதம், வில்லியம்சன், டெய்லர் ஆகியோரும், இங்கிலாந்து தரப்பில் பர்னஸ், ஜோரூட் ஆகியோரும் சதம் அடித்தனர்.

இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் இரட்டை சதம் அடித்தார். அந்த அணி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே ஆடியது.

இந்த டெஸ்ட் டிரா ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

20 ஓவர் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
Tags:    

Similar News