செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி

பெண்கள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு ரன்னில் தோல்வியைத் தழுவிய இந்தியா

Published On 2019-11-03 12:46 GMT   |   Update On 2019-11-03 12:46 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி உள்ளூர் நேரப்படி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 94 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), நடாஷா மெக்லின் 51 ரன்னும் விளாசினர்.

அடுத்து 226 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்களுடன் (39.2 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதி ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அனிசா முகமது முதல் பந்தில் எக்தா பிஸ்த் (0) விக்கெட்டையும், கடைசி பந்தில் பூனம் யாதவ் (0) விக்கெட்டையும் வீழ்த்தி திரிலிங்கான ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்காட்டினார்.

50 ஓவர்களில் இந்திய அணி 224 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆகி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியா பூனியா 75 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 ரன்னும் எடுத்தனர். கேப்டன் மிதலி ராஜ் 20 ரன்னில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர் அனிசா முகமது 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.
Tags:    

Similar News