செய்திகள்
விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி

விஜய் ஹசாரே டிராபி: தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2019-10-23 12:50 GMT   |   Update On 2019-10-23 12:50 GMT
குஜராத்தை ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விஜய் ஹசாரே டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு.
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. பெங்களூருவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - குஜராத் அணிகள்  மோதின.

டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. மழைக்காரணமாக அவுட்பீல்டு ஈரப்பதமாக காணப்பட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் குஜராத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க திணறினர். இறுதியில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராவல் 40 ரன்களும், பட்டேல் 47 ரன்களும் சேர்த்தனர். தமிழ்நாடு அணி சார்பில் முகமது மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணியின் அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முரளி விஜய் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். அடுத்த வந்த பாபா அபரஜித் 6 ரன்னில் வெளியேறினார்.

அபிநவ் முகுந்த் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 47 பந்தில் 47 ரன்கள் சேர்த்து நம்பிக்கையூட்டினார். ஷாருக் கான் ஆட்டமிழக்காமல் 46 பந்தில் 56 ரன்கள் சேர்க்க தமிழ்நாடு 39 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தமிழ்நாடு, குஜராத் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்திருந்தனர். லீக் ஆட்டத்திலும் குஜராத் அணியை தமிழ்நாடு வீழ்த்தியிருந்தது குறுப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் சத்தீஷ்கர் - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சத்தீஷ்கர் பேட்ஸ்மேன்கள் கர்நாடகாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

அமன்தீப் கார் 78 ரன்களும், ருய்கர் 40 ரன்களும் சேர்க்க 49.4 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது சத்தீஷ்கர்.

பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், படிக்கல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். படிக்கல் 98 பந்தில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து மயங்க் அகர்வால் களம் இறங்கினார். கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். கர்காடகா 40 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கேஎல் ராகுல் 88 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நாளை மறுநாள் பெங்களூருவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Tags:    

Similar News