செய்திகள்

மராட்டிய ஓபன் டென்னிஸ் - இந்தியாவின் போபண்ணா ஜோடி சாம்பியன்

Published On 2019-01-06 01:12 GMT   |   Update On 2019-01-06 01:12 GMT
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
புனே:

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்-ஜானி ஓமரா இணையை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய போபண்ணா- திவிஜ் சரண் கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 38 வயதான போபண்ணா வென்ற 18-வது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். திவிஜ் சரணுக்கு இது 4-வது பட்டமாக அமைந்தது.



இருவரும் 2018-ம் ஆண்டில் எந்த கோப்பையும் வெல்லாத நிலையில், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி இருக்கிறார்கள். 32 வயதான திவிஜ் சரண் கூறும் போது, ‘நிச்சயம் எனக்கு இது சிறப்பான வெற்றி தான். உள்ளூரில் நான் வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இது, புதிய சீசனுக்கு எனக்கு நிறைய நம்பிக்கையை தந்துள்ளது’ என்று குறிப்பிட்டார். போபண்ணா- திவிஜ் சரண் இணைக்கு 250 தரவரிசை புள்ளிகளுடன், ரூ.20 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபனிலும் இவர்கள் இணைந்து விளையாட இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), 100-ம் நிலை வீரரான இவா கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். இதில் ஆண்டர்சனுக்கு எல்லா வகையிலும் கார்லோவிச் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் நீயா-நானா என்று பரபரப்புடன் நகர்ந்தது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் இரு செட்டுகளில் இருவரும் தலா ஒன்றை வசப்படுத்தினர். இதே போல் கடைசி செட்டிலும் அனல் பறந்தது.

இருவரும் தங்களது சர்வீஸ்களை புள்ளிகளாக மாற்றுவதில் மட்டும் கவனமாக இருந்தனர். ஆண்டர்சன் 6-5 என்று முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்திற்குரிய புள்ளியை நெருங்கினார். ஆனால் எதிராளியின் இரண்டு சாம்பியன்ஷிப் புள்ளி வாய்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்ட கார்லோவிச் இந்த செட்டையும் டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். டைபிரேக்கரில் தொடக்கத்தில் கார்லோவிச்சின் (5-2) கை ஓங்கினாலும், அதன் பிறகு ஆண்டர்சன் சுதாரித்துக் கொண்டு மீண்டு வெற்றிக்கனியை பறித்தார்.

2 மணி 44 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த மோதலில் ஆண்டர்சன் 7-6 (4), 6-7 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் கார்லோவிச்சை சாய்த்து பட்டத்தை சொந்தமாக்கினார். இது அவரது 6-வது பட்டமாகும். 39 வயதான கார்லோவிச் இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. வாகை சூடிய ஆண்டர்சனுக்கு ரூ.62 லட்சமும், 2-வது இடம் பெற்ற கார்லோவிச்சுக்கு ரூ.33 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
Tags:    

Similar News