செய்திகள்

2-வது டெஸ்ட்- ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை சமன் செய்தது வங்காள தேசம்

Published On 2018-11-15 10:34 GMT   |   Update On 2018-11-15 10:34 GMT
டாக்காவில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் வங்காள தேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. #BANvZIM
வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் டாக்காவில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. மொமினுல் ஹக்யூ (161), முஷ்பிகுர் ரஹிம் (219 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்தது.

பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. பிரெண்டன் டெய்லர் (110), பிரையர் சரி (53), மூர் (83) ஆகியோரின் ஆட்டத்தால் 304 ரன்கள் சேர்த்தது.

முதல் இன்னிங்சில் 218 ரன்கள் முன்னிலைப் பெற்ற வங்காள தேசம் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் மெஹ்முதுல்லா (101 நாட்அவுட்) சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் வங்காள தேசம் ஒட்டுமொத்தமாக 442 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

443 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது. பிரெண்டன் டெய்லர் 4 ரன்னுடனும், வில்லியம்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. வில்லியம்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜிம்பாப்வே-யின் விக்கெட் சராசரி இடைவெளியில் இழந்தது. ஆனால் பிரெண்டன் டெய்லர் மட்டும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பிரெண்டன் டெய்லர் 106 ரன்னுடனும் களத்தில் இருந்தாலும் ஜிம்பாப்வே 83.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்காள தேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் தொடரை 1-1 என சமன் செய்தது.
Tags:    

Similar News