செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி - மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

Published On 2018-08-31 20:26 IST   |   Update On 2018-08-31 20:26:00 IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி இறுதி போட்டியில் ஜப்பான் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியதால் வெள்ளிப் பதக்கம் வென்றது. #AsianGames2018
ஜகார்தா :

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டத்தில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றது.

இந்தோனேஷியா (8-0), கஜகஸ்தான் (21-0), தென்கொரியா (4-1), தாய்லாந்து (5-0) ஆகிய அணிகளை வீழ்த்தியது. அரை இறுதியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதுவரை 39 கோல்கள் அடித்து தோல்வியே சந்திக்காமல் இந்தியா இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறது.  

இந்நிலையில், இன்று நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில், 2-1 எனும் கோல் கணக்கில் ஜப்பானிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.

விருவிருப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்திலேயே ஜப்பான் பெணால்டி கார்னர் முறையில் கோல் அடித்து 1-0 என் முன்னிலை பெற்றது.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் இந்திய வீராங்கணை நவ்னீத் அட்டகாசமான கோல் அடிக்க இரண்டு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது.

பின்னர் இரண்டு அணிகளும் தங்கப்பதக்கத்திற்கான அடுத்த கோல் அடிப்பதற்காக முனைப்பு காட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி மீண்டும் பெணால்டி கார்னர் முறையில் கோல் அடித்ததால் இந்தியாவின் வெற்றிக் கனவு தகர்ந்தது.

இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றது இந்தியா, இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப்பட்டியலில் 13 தங்கம், 23 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 
Tags:    

Similar News