செய்திகள்

டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஐதராபாத்

Published On 2018-05-10 18:04 GMT   |   Update On 2018-05-10 18:04 GMT
டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #DDvSRH
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

பிரித்வி ஷா 9 ரன்னிலும், ஜேசன் ராய் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்சல் பட்டேல் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், புவனேஷ்குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 14 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து, கேப்டன் வில்லியம்சன் இறங்கினார். தவானும், வில்லியம்சனும் இணைந்து டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

இறுதியில், ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 50 பந்தில் 92 ரன்களுடனும், வில்லியம்சன் 53 பந்தில் 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. #IPL2018 #DDvSRH
Tags:    

Similar News