செய்திகள்

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு 100-வது ஆட்டம்

Published On 2017-09-28 03:50 GMT   |   Update On 2017-09-28 03:50 GMT
இந்தியாவுக்கு எதிராக இன்று நடக்கும் 4-வது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு 100-வது போட்டியாகும்.

ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு இது 100-வது ஒரு நாள் போட்டியாகும். 2009-ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் அடியெடுத்து வைத்த அவர் இதுவரை 99 ஆட்டங்களில் விளையாடி 13 சதங்கள் உள்பட 4,093 ரன்கள் எடுத்துள்ளார். 30 வயதான வார்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவது பெருமைக்குரிய விஷயம். அதனால் தான் அனுபவித்து, உற்சாகமாக விளையாடுகிறோம்.

இத்தகைய நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் 3 ஆட்டங்களில் தோற்று தொடரை இழந்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ஒரு நாள் தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளும் நடக்கிறது. அடுத்து வரும் ஆஷஸ் தொடருக்கு முன்பாக, தற்போதைய நிலைமையை மாற்றி எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற விரும்புகிறோம்.

கொல்கத்தா ஒரு நாள் போட்டியில் கடினமான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. பந்து அளவுக்கு அதிகமாக ஸ்விங் ஆனது. ஆனால் இந்தூரில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகவில்லை. பேட்டிங்குக்கு ஏதுவாக இருந்தது. எனவே சூழ்நிலைக்கு தக்கபடி ஆட்ட அணுகுமுறையை மாற்றிக்கொள்வது அவசியமாகும்.

100-வது ஒரு நாள் போட்டியில் களம் காண்பது குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இவ்வளவு சீக்கிரம் 100-வது ஆட்டத்தில் ஆடுவேன் என்று நினைக்கவில்லை. உண்மையிலேயே மிகவும் பெருமை அளிக்கிறது’ என்றார்.

பேட்டுகளின் அளவுகளுக்கு ஐ.சி.சி. விதித்திருக்கும் கட்டுப்பாடு குறித்து கேட்ட போது, ‘நான் எனது பேட்டை ஏற்கனவே மாற்றி விட்டேன். கடந்த இரண்டு வாரங்களாக இந்த பேட்டை தான் பயன்படுத்துகிறேன். புதிய பேட்டில் விளையாடி பழகி விட்டேன். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்றார்.
Tags:    

Similar News